அரசாங்கம் இதுவரை கூறிய பொய்களை திரும்பி பார்த்து விசாரணை நடத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

அரசாங்கம் இதுவரை கூறிய பொய்களை திரும்பி பார்த்து விசாரணை நடத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

அரசாங்கம் இதுவரை கூறிய பொய்களை திரும்பி பார்த்து விசாரணை நடத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2021 | 8:15 pm

Colombo (News 1st) அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை கூறியுள்ள பொய்யான அறிவிப்புகள் தொடர்பாக திரும்பிப் பார்த்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு நாடு உள்ளாகலாம் என தாம் கடந்த வருடம் ஜனவரி 24 ஆம் திகதி அரசாங்கத்துக்கு வலியுறுத்திய போதிலும் அத்தகையதொரு அபாய நிலைமை இல்லை என அரசாங்கம் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வருடம் பெப்ரவரி 5 ஆம் திகதி மக்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்த போது விடயத்துக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் முகக்கவசம் தேவைப்படாது என கூறியதனை சஜித் பிரேமதாச தமது அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு உலகுமே தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருக்கும் போது பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களோ கங்கைகளில் குடங்களைப் போட்டு சான்று வழங்கப்படாத பாணியை பாராளுமன்றத்துக்கே கொண்டுவந்து ஜனரஞ்சகப்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.

தடுப்பூசியை கொண்டுவர வேண்டியதன் முக்கியத்தும் மற்றும் தேவைப்பாட்டை தொடர்ச்சியாக கூறும்போது வேறு வழிமுறைகளை பரிசீலிப்பதாகவும் தேவையான தருணத்தில் தடுப்பூசி கொண்டுவரப்படும் எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் கூறியதனையும் எதிர்க்கட்சித் தலைவர் நினைவுகூர்ந்துள்ளார்.

இத்தகைய செயற்பாடுகளால் தடுப்பூசி ஏற்றும் பணியை தாமதப்படுத்தி உயிர்களை அரசாங்கமே பலி கொடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 11 ஆம் திகதி, மே 23 ஆம் திகதிகளில் இரண்டு அமைச்சர்கள் அரசாங்கத்திடம் நிதி இருப்பதாகக் கூறிய போதிலும் மே 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, அரசாங்கத்திடம் நிதி இல்லை என கூறி மக்களிடம் நிதி சேகரிக்கும்படி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான பரஸ்பர அறிவிப்புகளை விடுத்த அமைச்சர்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்னவென்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, 2021 மே 4 ஆம் திகதியும் கடந்த செவ்வாய்க்கிழமையும் Tocilizumab மருந்தின்மை தொடர்பாக அரசாங்கத்துக்கு நினைவுகூரிய போது அந்த மருந்துக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை என உண்மையற்ற விதத்தில் கருத்து தெரிவித்த அமைச்சருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்