by Staff Writer 20-08-2021 | 2:07 PM
Colombo (News 1st) ஊடகங்களுக்கு முன்பாக கண்காட்சி நடத்தி எதிர்மறையான எண்ணங்களை மக்களிடையே பரப்புவதற்கு பதிலாக, உண்மையை விளக்கி மக்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதென
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
சவால் மிக்க இந்த சந்தர்ப்பத்தில், அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு பதிலாக மக்களின் உயிரை பாதுகாப்பது அரசாங்கத்தின் முயற்சியாகும் என அமைச்சர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று நிலைமையில் நாட்டை மூடுமாறு எதிர்க்கட்சி கொண்டுசெல்லும் பிரசார நடவடிக்கைகளுக்கு தேரர்கள் உள்ளிட்ட மத தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
தொற்று நிலைமையை முன்வைத்து, நாட்டு மக்களின் மன உறுதியை வீழ்த்தும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் செயல்படுத்தி வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை மூடுமாறு யோசனைகளை முன்வைக்கும் தொழிற்சங்கத்தினருக்கு, நாட்டை மூடினாலும் அவர்களுக்கு சம்பளம் கிடைப்பதால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டை மூடுவதாயின் மாதாந்த சம்பளம் பெறாத குடும்பத்தினர் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் தாம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 வீதம், அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் 50 வீதம் மற்றும் சிறு தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 வீதத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் யோசனை முன்வைத்துள்ளார்.