அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2021 | 11:47 am

Colombo (News 1st) மூட நம்பிக்கையை அகற்றி, அறிவியல் ரீதியாக தீர்மானித்து நாட்டை மூடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சுய புத்தியுடன் செயற்படக்கூடிய எவரையும் சலிப்படைய வைக்கும் நிலைக்கு நமது நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மாத்திரம் கருத்திற்கொண்டாலே நாடு என்ற ரீதியில் நாம் தள்ளப்பட்டுள்ள தரம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு சீர்குழைந்து இருள் சூழ்ந்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போர் தொடர்பான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய பயணக் கட்டுப்பாடு நடைமுறை சாத்தியமற்ற, பயனற்ற செயற்பாடு என்பதனை நாள்தோறும் பதிவாகும் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை உறுதிப்படுத்துகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாளாந்தம் நடத்தப்படும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும் அத்தியாவசியமான ஔடதங்களை துரிதமாக இறக்குமதி செய்யவும் சுகாதாரக் கட்டமைப்பு வீழ்ச்சியடையாதவாறு உரிய வகையில் நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இறைவனிடம் கேட்டு தீர்மானங்களை எடுப்பதில்லை என்பதுடன் அவர்கள் தமது அறிவியல் ரீதியிலான சுகாதார கட்டமைப்புக்கே முன்னுரிமை அளித்துள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

சகல சுகாதாரத்துறை நிபுணர்களும் மகாநாயக்க தேரர்களும் கட்சித் தலைவர்களும் தற்போதைய பாரதூர தன்மையை புரிந்துகொண்டே நாட்டை மூடுமாறு கோரியுள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்