by Staff Writer 18-08-2021 | 6:46 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை கரடியனாறு பொலிஸ் பிரிவுற்குட்பட்ட முந்தனை ஆற்றுப் பகுதியில் நால்வர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதிக்கு துப்பாக்கியுடன் வருகை தந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
மணல் அகழும் இடத்திற்கு வந்த குறித்த நபர் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரத்தை கோரியதாகவும் அங்கிருந்த இருவர் இதன்போது தப்பியோடியதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது அங்கிருந்த மற்றைய இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் குறித்த இடத்திற்கு வருகை தந்த நபரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.