by Staff Writer 18-08-2021 | 9:38 PM
Colombo (News 1st) நீதிபதிகளை மாநாடொன்றுக்கு அழைத்து நீதித்துறை நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் ஊடாக பாரிய முன் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளை நியமித்தல், பதவி உயர்வு, சேவை தரம் கீழ்நிலைப்படுத்தல், இடமாற்றம் மேற்கொள்ளும் அதிகாரம் ஆகிய அதிகாரங்கள் நீதித்துறை சேவை ஆணைக்குழுவிற்கு உள்ளன.
எனினும், நீதி நிர்வாகம் குறித்த பரிந்துரைகள், உத்தரவுகள் அல்லது ஆலோசனைகளை வழங்க அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய தேவையற்ற செல்வாக்கு, சட்டவாட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தில் 20ஆவது திருத்தத்தின் தாக்கத்தின் மீதான பொது மக்கள் சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு, நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியன மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதுடன், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு சவால் விடும் சகல விடயங்களுக்கு எதிராக தாம் முன் நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.