கொரோனா தொற்று: வியாபார நிலையங்களை தாமாகவே மூடும் மக்கள்

by Staff Writer 18-08-2021 | 1:33 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றின் அபாய நிலையை கருத்திற்கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றை தாமாகவே முன்வந்து மூடுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனடிப்படையில், பட்டபொல நகரை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு பட்டபொல கைத்தொழில் சேவை மற்றும் வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். திவுலப்பிட்டிய நகரம் மற்றும் பாதுராகொட நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன. மரதகஹமுல நகரை ஒரு வாரமளவில் மூடுவதற்கு மரதகஹமுல ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் ஒரு வாரமளவில் மூடுவதற்கு அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். இரத்தினபுரி - பல்லேபெத்த மற்றும் உடவலவ நகரங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அரச நிதி நிறுவனங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மாத்தளை - யடவத்த நகர் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (17) மாலை 6 மணி முதல் திருகோணமலை நகர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு திருகோணமலை நகர சபை, பிரதேச சபை மற்றும் வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். நேற்று (17) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு ருவான்வெல்ல, அங்குருவெல்ல, கரவனல்ல ஆகிய நகரங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு ருவான்வெல்ல பிரதேச சபை மற்றும் வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஒரு வார காலப்பகுதிக்கு சிலாபம் நகரை மூடுவதற்கு நேற்று (17) கூடிய நகர சபையின் அமர்வின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக தெரணியகல நகரின் வர்த்தக தொகுதிகளை இன்று (18) முதல் 7 நாட்களுக்கு மூடுவதற்கு தெரணியகலை வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். இதேவேளை, புறக்கோட்டை வர்த்தக நிலையங்கள் சில இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றன. தம்புத்தேகம விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தை 7 நாட்களுக்கு மூடுவதற்கு வர்த்தக சங்கம் முடிவெட்டியுள்ளது. தற்போது வரையில் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 16 வர்த்தகத் தொகுதிகளில் பணியாற்றும் 40 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்குரஸ்ஸ வர்த்தக சங்கத்தினர் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.