நீதிமன்ற அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட மாநாடு தொடர்பில்  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவதானம்

by Staff Writer 17-08-2021 | 10:23 PM
Colombo (News 1st) நீதிமன்ற அதிகாரிகளுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாநாடு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிரமாகக் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் இரண்டு நீதிபதிகளுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படும், ஊடகங்களில் வௌியான சில விடயங்கள் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கை, நீதிமன்றத்துடன் தொடர்புடைய விடயம் தொடர்பில் கலந்துரையாடல்,
  • நாட்டில் நிலவும் தொற்று நிலைமைக்கு மத்தியில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றவியல் வழக்கின் ஏற்பாடுகளிலுள்ள சரத்துக்களை பயன்படுத்தும் விதம் தொடர்பில் நீதிமன்ற அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குதல்,
  • எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கு பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு அழுத்தம் விடுக்க முயற்சிக்கப்பட்டதாக, நீதிமன்ற அதிகாரிகளிடையே நிலைப்பாடொன்றை ஏற்படுத்தல்,
ஆகிய விடயங்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. வழக்கு விசாரணையின் போது, வழக்கின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, வேறு விடயங்களை ஆராய்வதிலிருந்து சுதந்திரமாக நீதிமன்ற அதிகாரிகள் செயற்படுகின்றார்கள் என்ற நம்பிக்கை வழக்குத் தொடுனர்களுக்கும் அவர்களின் சட்டத்தரணிகளுக்கும் காணப்படல் வேண்டும். இந்த விடயம், நீதிமன்ற சுயாதீனம் மற்றும் சட்டவாட்சியின் அடிப்படையாகும் என்ற புரிதல் நீதிபதிகளுக்கு உள்ளதென கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதியை நிலைநாட்டுவது மாத்திரமன்றி, நிலைநாட்டப்படும் என காண்பிக்க வேண்டியதும் அவசியமானது என்ற நிலைப்பாட்டிற்கு, தற்போது வௌியாகும் விடயங்கள் முரணானவை என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த மாநாட்டின் மூலம், நீதிமன்ற விடயங்களை நிறைவேற்றுகையில், அதனை முன்னெடுக்க வேண்டிய விதம் தொடர்பில் அழுத்தம் அல்லது நீதிமன்றம் சார்ந்த எண்ணம் மற்றும் விருப்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதென்று, நீதிபதிகள் அல்லது பொதுமக்களின் மனங்களில் தோன்றக்கூடாது என சட்டத்தரணிகள் சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் சட்டக்கோட்பாடு இல்லாமற்போனால், இந்த நிறுவனங்கள் சுயாதீனமானவை என்ற நிலைப்பாடு குறைவடையும் அல்லது அற்றுப்போகும் என சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறான கடினமான சூழ்நிலையிலும் வரையறைகள் இன்றி பேணப்பட வேண்டிய கௌரவத்திற்கு, இவ்வாறான மாநாடுகள் தொடர்பில் தற்போது வௌியாகியுள்ள விடயங்களூடாக எதிர்மறையான அழுத்தங்கள் இல்லை என்பதை உறுதி செய்வதே, பிரதம நீதியரசர் தலைமையிலான நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதன் நோக்கமாகும்.