ஆப்கானிஸ்தானிலிருந்து வௌியேற காத்திருக்கும் மக்கள்

யுத்த வெற்றியை அறிவித்த தலிபான்கள்: நாட்டை விட்டு வௌியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ள மக்கள்

by Bella Dalima 16-08-2021 | 2:06 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் யுத்த வெற்றியை அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்குள் ஆயுதமேந்திய தலிபான் அமைப்பினர் நுழைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகின்றது. நாட்டை விட்டு வௌியேறுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அமெரிக்க தூதரக அதிகாரிகள் வௌியேற்றப்படுவதைத் தொடர்ந்து அமெரிக்க படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க பிரஜைகள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் ஆப்கானிஸ்தானை விட்டு வௌியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக 6000 அமெரிக்கத் துருப்பினர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யுத்த காலத்தில் அமெரிக்க இராணுவத்திற்கு துணைபுரிந்த சுமார் 44,000 ஆப்கானிஸ்தானியர்கள் காபூலுக்கு வௌியெ உள்ளதாகவும் அவர்கள் நாட்டை விட்டு அவசரமாக வௌியேற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை காரணமாக சர்வதேச வர்த்தக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. Hamid Karzai சர்வதேச விமான நிலையத்திலிருந்து இராணுவ விமானங்கள் பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தொடர்பில் வீடுகள் தோறும் சென்று தேடுதல்கள் இடம்பெறுவதாகவும் அவர்களுக்கு தலிபான்கள் தண்டனை வழங்குவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வௌியாகியுள்ளன. இதனிடையே நாட்டை விட்டு வௌியேற விரும்பும் ஆப்கானிஸ்தான் பிரஜைகளையும் வௌிநாட்டினரையும் பாதுகாப்பாக வௌியேற இடமளிக்குமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.