யானை சுட்டுக்கொலை: விசாரணைகள் முன்னெடுப்பு

யால வலயத்தில் காட்டு யானை சுட்டுக்கொலை: மூன்று கட்ட விசாரணைகள் முன்னெடுப்பு

by Staff Writer 16-08-2021 | 12:57 PM
Colombo (News 1st) யால வலயத்தின் மூன்றாம் பிரிவில் காட்டு யானை கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான விசாரணைக்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தினூடாக ஒரு விசாரணையும், பொலிஸாரால் தனி விசாரணையும், ஒன்றிணைந்த விசாரணையுமாக மூன்று கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வன ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார். வன ஜீவராசிகள் உதவி பணிப்பாளரின் தலைமையில், இந்த குற்றச்செயல் தொடர்பில் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யானை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய யானையின் உடலை புதைப்பது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என வன ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். குறித்த யானை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரையான விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. யானையின் தந்தம் கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.