கனடாவில் விரைவில் இடைக்கால பொதுத்தேர்தல்

இடைக்கால பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள கனேடிய பிரதமர்

by Bella Dalima 16-08-2021 | 11:42 AM
Colombo (News 1st) கோடைக்கால இடைக்கால பொதுத்தேர்தலொன்றுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 20 ஆம் திகதி இந்த பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திட்டமிடப்பட்ட பொதுத்தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஆளும் லிபரல் அரசாங்கத்திற்கு அருதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், பெரும்பான்மையை பெறக்கூடிய நிலை தற்போது காணப்படுவதாக கருத்துக்கணிப்புகள் வௌிப்படுத்திய நிலையிலேயே இந்த பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. மகா ராணியின் பிரதிநிதியாகிய, கனடாவின் அரச தலைவர், ஆளுநர் நாயகம் Mary Simon-ஐ சந்தித்த பிரதமர் பாராளுமன்றத்தை கலைக்குமாறு நேற்று (15) கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது பொதுத்தேர்தலொன்று அவசியமானது எனவும், இந்த முக்கியமான தருணத்தில் முன்னோக்கிய பயணத்திற்கு வாக்காளர்களுக்கு ஒரு தெரிவு இருப்பதாகவும் அவர் கூறினார். COVID-19 தொற்றுக்கெதிரான போராட்டத்தை எவ்வாறு நிறைவு செய்வது என்பதை கனேடியர்கள் தீர்மானிக்க வேண்டுமென 49 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.