பாரதத்தின் 75 ஆவது சுதந்திர தினம்

பாரதத்தின் 75 ஆவது சுதந்திர தினம்; டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு

by Bella Dalima 15-08-2021 | 12:40 PM
Colombo (News 1st) பாரதத்தின் 75 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை சீர்குலைக்கும் நோக்குடன், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதனையடுத்து, நாடு முழுவதும்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றும் செங்கோட்டை பகுதியில், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தனி பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளதுடன், செங்கோட்டையை சுற்றி 350 கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் அந்நியர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக வெளியான தகவலையடுத்து, பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மண்டபம் ரயில் நிலையம் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை, சுதந்திர தினத்தையொட்டி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். "இந்தியாவினுடைய ஜனநாயகம், நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டதால்,நாடாளுமன்றமே ஜனநாயகத்தின் ஆலயம்" என குடியரசுத்தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், பலரது உயிர்களைக் காப்பாற்ற முடியாமற்போனது தமக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் கவலை வௌியிட்டார். அத்துடன், டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் திறமைகளை வௌிப்படுத்தியவர்களுக்கு தமது பாராட்டுதல்களையும் அவர் தெரிவித்தார்.