கைதிகளுக்காக புதிய கொரோனா சிகிச்சை நிலையங்கள்

கைதிகளுக்காக புதிய கொரோனா சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிப்பு 

by Staff Writer 15-08-2021 | 12:22 PM
Colombo (News 1st) COVID தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக புதிய சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தல்தென, பல்லேகல, அம்பேபுஸ்ஸ மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகள் இதுவரை இயக்கச்சி மற்றும் வட்டரக்க சிகிச்சை நிலையங்களுக்கே அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதேவேளை, COVID தொற்று அதிகரித்து செல்வதால், சிறைச்சாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை குறைத்துக்கொள்வதற்காக, சிறு குற்றங்கள் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்ட 14,000 கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தற்போது 19,000 வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணிகளும் கைதிகளை சந்திக்க முடியாது எனவும் வழக்குகளுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ளவும் வழங்கவும் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.