மாவட்ட எல்லைகளில் மேலதிக வீதித் தடைகள்

by Staff Writer 14-08-2021 | 11:13 AM
Colombo (News 1st) மாவட்ட எல்லைகளில் மேலதிக வீதித் தடைகளை இடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸாருடன் இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்போர் தொடர்பில் ஆராயப்படுவதுடன், இந்த நடவடிக்கையை கடுமையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (13) நள்ளிரவு தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொது இடங்களில் நடமாடும் போது, இரண்டு COVID தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான சோதனைகள் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். இதனிடையே மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகளும் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் பஸ் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இதேவேளை, மாகாணங்களுக்குள்ளும் முன்னெடுக்கப்படும் பொது போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொழிலுக்கு செல்வோருக்கு மாத்திரம் மாகாணங்களுக்குள் பொது போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக திலும் அமுனுகம கூறினார்.