கொழும்பில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்கிறது

by Staff Writer 14-08-2021 | 2:25 PM
Colombo (News 1st) இன்றும் சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத, கொழும்பு நகர எல்லைக்குள் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று வட கொழும்பில் தடுப்பூசி ஏற்றப்படுகிறது. கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். இதேவேளை, செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொது இடங்களில் நடமாடும் போது, இரண்டு COVID தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்கள், குருதி சுத்திகரிப்பு முன்னெடுக்கப்படுவோர், சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டுள்ளோர் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியை மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய, இன்று 14 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு சென்று முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் 1906 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகவும் 011 2 860 002 என்ற இலக்கத்தினூடாகவும் , COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயலணியுடன் தொடர்பை மேற்கொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் 24 மணித்தியால தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.