அரசாங்கம் உயிர்களுடன் விளையாடுகிறது

அரசாங்கம் உயிர்களுடன் விளையாடுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை

by Staff Writer 14-08-2021 | 7:35 PM
Colombo (News 1st) அனைத்தையும் விட மக்களின் உயிர் பெறுமதியானது என்பதால், நிபுணர்களின் ஆலோசனையை கருத்திற்கொண்டு, குறுகிய காலத்திற்கேனும் நாட்டை முடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாளாந்தம் ஐயாயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதுடன், 250-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாவதாக வைத்தியசாலைகளிலிருந்து உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகள் காணப்படுகின்றமை இதன் மூலம் புலனாவதாகவும் நிலைமை உக்கிரமடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். கொரோனா தொற்று முதலில் அடையாளம் காணப்பட்டபோது நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டதாகவும், அரசாங்கமே பொறுப்பின்றி செயற்பட்டதாகவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னிச்சையான தீர்மானங்களின் மோசமான முடிவுகளை அப்பாவி மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அரசாங்கம் உயிர்களுடன் விளையாடுவதாகவும் இறுதியில் பேரவலத்தை ஏற்படுத்தும் என்பதை விரைவில் புரிந்துகொள்ள முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.