மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் சமாதியடைந்தார்

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் சமாதியடைந்தார்

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் சமாதியடைந்தார்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2021 | 5:02 pm

Colombo (News 1st) மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமது 77 ஆவது வயதில் நேற்றிரவு சமாதியடைந்தார்.

சுவாமிகளின் பூதவுடல் மதுரை முனிச்சாலை அருகில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.

மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பூதவுடலுக்கு, கோவை காமாட்சிபுர ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம், இளைய மதுரை ஆதீனம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, சுவாமிகளின் மடத்தின் உட்புறத்தில், உடலானது சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9 ஆம் திகதி மதுரையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்றிரவு சிவ பிராப்தம் அடைந்தார்.

திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ திருமடங்களில் ஒன்றாக மதுரை ஆதீனம் திகழ்கின்றது.

இதன் 292 ஆவது குருமகா சன்னிதானமாக 1975 மே மாதம் 27 ஆம் திகதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பட்டம் சூட்டப்பட்டதுடன், 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி சுவாமிகள் இந்த பட்டத்தினை ஏற்றார்.

1,500 ஆண்டுகள் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை ஆதீனத்தின் கீழ், தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோவில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோவில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன.

அத்துடன், பல்லாயிரம் ஏக்கர் நிலமும் இந்த ஆதீனத்திற்கு சொந்தமாகவுள்ளது.

இதேவேளை, மதுரை ஆதீனத்தின் 293 ஆவது குருமகா சன்னிதானமாக ஹரிஹர சுவாமிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்னும் 10 நாட்களில் முறைப்படி பொறுப்பேற்பார் என ஆதீன மட நிர்வாகிகள் அறிவித்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாமிகளின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த அருணகிரிநாதர் சுவாமியின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை ஆதீனம் அவர்கள், ஆன்மீக பெரியவர், பக்திமான், சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

சுவாமிகளின் ஆத்மா சாந்தியடைய கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குவதாக, சர்வதேச இந்துமத குரூ பீடத்தின் குரு பீடாதிபதி ஶ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்