ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 13-08-2021 | 11:54 AM
Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (12) நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். COVID தொற்று அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தமது ஊழியர்களுக்கு எவ்வித சுகாதார நலத்திட்டங்களும் முன்னெடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் ரயில்வே திணைக்களமும் துறைசார் அமைச்சும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். தங்களின் கோரிக்கை தொடர்பில் அனைத்து அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து, தீர்வு கிடைக்காமையாலேயே தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவிடம் வினவியபோது, தற்போது காணப்படும் சிக்கல் தொடர்பில் இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன்போது முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு தொழிற்சங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். எவ்வாறாயினும், இன்றைய தினம் ரயில் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் வரையறுக்கப்பட்ட சில சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.