அதிகார பகிர்விற்கு தயாராகும் ஆப்கானிஸ்தான்

தலிபான்களுடன் அதிகார பகிர்விற்கு தயாராகும் ஆப்கானிஸ்தான்

by Bella Dalima 13-08-2021 | 2:42 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது தலிபான்களுக்கு முக்கிய வெற்றியாகவும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெரும் வீழ்ச்சியாகவும் கருதப்படுகிறது. ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளனர். தலிபான்கள் தலைநகர் காபூலையும் கைப்பற்றக்கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வன்முறைகளுக்கு பயந்து காபூல் நகரில் தஞ்சமடைந்துள்ளதால், அங்கு தாக்குதல் நடந்தால் அது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கிட்டதட்ட ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி முழுவதும் தற்போது தலிபான் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் போரை முடிவிற்குக் கொண்டுவர, தலிபான்களுடன் அதிகாரத்தை பகிா்ந்துகொள்ள அரசாங்கம் முன்வந்துள்ளது. இதுகுறித்து, கத்தாா் தலைநகா் டோஹாவில் நடைபெற்று வரும் ஆப்கன் அமைதி பேச்சுவாா்த்தையின் போது, அதிகாரப் பகிா்விற்கான தங்களது செயல்திட்டத்தை தலிபான் பிரதிநிதிகளிடம் ஆப்கனானிஸ்தானின் பேச்சுவாா்த்தை குழுவினா் வழங்கியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.