நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6000-ஐ கடக்கக்கூடும் என எதிர்வுகூறல்

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6000-ஐ கடக்கக்கூடும் என எதிர்வுகூறல்

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6000-ஐ கடக்கக்கூடும் என எதிர்வுகூறல்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2021 | 2:12 pm

Colombo (News 1st) தற்போதுள்ளவாறு மக்கள் நடமாட்டம் தொடர்ந்தால் அடுத்த மாதமளவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை கடக்கக்கூடும் என சுயாதீன சுகாதார விசேட நிபுணர்கள் குழு எதிர்வுகூறியுள்ளது.

ஒக்டோபர் மாதம் முதல் வாரத்திலிருந்து நாளாந்தம் 220 கொரோனா மரணங்கள் பதிவாகக்கூடும் என அந்த குழு அனுமானிக்கின்றது.

அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் நாட்டின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆக பதிவாகலாம் என சுகாதார விசேட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

நான்கு வாரங்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினால் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை 1000 வரை மட்டுப்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையையும் 25 வரை குறைப்பதற்கும் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையை நாளாந்தம் 25 வரை குறைக்கவும் முடியும் என விசேட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறுக்கமான கட்டுப்பாடுகள் மூலம் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் 18,000 மரணங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளை அலுவலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த விசேட நிபுணர்கள் குழுவில் தேசிய மட்டத்தில் 16 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி , விசேட வைத்திய நிபுணர் பாலித அபேகோன், சமூக வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பொது சுகாதார விசேட நிபுணர் விந்தியா ஆரியரத்ன, பேராசிரியர் அசித டி சில்வா, விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ, இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் மலிக் பீரிஸ், பேராசிரியர் நீலிகா மலவிகே, பேராசிரியர் காமினி மெண்டிஸ், பேராசிரியர் மனுஜ் வீரசிங்க, விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜயவிக்ரம ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போது காணப்படும் நிலைமை தொடருமானால், நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் எனவும் நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்