'அரசின் நடவடிக்கை மனிதாபிமானமற்றதாக மாறி விட்டது'

அரசின் நடவடிக்கை மனிதாபிமானமற்றதாக மாறி விட்டது - எதிர்க்கட்சித் தலைவர்

by Staff Writer 11-08-2021 | 9:22 PM
Colombo (News 1st) இலங்கை மிகவும் தீர்மானமிக்க நிலைமையை எதிர்நோக்கியுள்ள சூழலில், மக்கள் தற்போது தங்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதை விட, அரசாங்கத்திடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அந்தளவிற்கு மனிதாபிமானமற்றதாக மாறிவிட்டதாகவும் மக்களின் எதிர்ப்பாளராக அரசாங்கம் மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை ஒதுக்கி வைத்து விட்டு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மக்கள் சார்பு கொள்கைக்கு மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவையும், பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்தும் திறனை அரசாங்கம் இழந்துவிட்டதாக எதிர்கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி மாஃபியாவை எதிர்கொள்வதாக அரசாங்கம் கூறிக் கொண்டாலும், அது முழுமையாக தோல்வியடைந்துள்ளதுடன், இன்று அரிசி விலைகள் அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். நெருங்கிய நண்பர்களுக்கு அதிக வரிச்சலுகை வழங்கி இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலையும் இன்று அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், சீனி மோசடியால் ஏற்படும் இழப்பு சிறிதல்லவெனவும் கூறியுள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி மற்றும் நச்சுத் தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் அழிவு மிகப்பெரியது எனவும் எதிர்க்கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. சந்தையில் ஊட்டச்சத்துக்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதுடன் இதன் காரணமாக குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை மா, சீனி, பால், கோப்பி மற்றும் இறைச்சி வகைகளின் மொத்த விலைகள் 16 முதல் 32 வீதம் வரை உயர்வடைந்துள்ளன. பால்மா, வெண்ணெய், சோயா, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் பழங்களுடன் உற்பத்தி செய்யப்படும் உப உற்பத்தி பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்த் கூறியுள்ளார். தீவிர வர்த்தக மாஃபியா செயல்படுகின்ற நிலையில், அதற்கும் அரசாங்கம் துணை நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். பொருட்களின் விலைக் கட்டுப்பாடு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வையே நடத்திச்செல்ல முடியாதுள்ள மக்களுக்கு, பொருட்களின் விலை அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாதுள்ள நிலைமை காணப்படுகின்ற நிலையில், அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொள்ளாது தேவையற்ற பாரிய திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.