அரசாங்கம் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றது

அரசாங்கம் அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றது - எதிர்க்கட்சித் தலைவர்

by Staff Writer 10-08-2021 | 6:47 PM
Colombo (News 1st) நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரதூரமான நிலையில் அனைத்து கட்சியினரும் இணைந்து கலந்துரையாடி விரைவில் தீர்மானம் ஒன்றை எடுப்பது முக்கியமானதாக காணப்பட்டாலும், இதுவரையில் அரசாங்கம் அது தொடர்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தன்னிச்சையான மனோபாவம் இதனூடாக வௌிப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதாகவும் இதனால் ஏற்படும் கவலைக்கிடமான விளைவுகளுகான நட்டஈட்டை நாட்டு மக்களே செலுத்தும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மக்களுக்கு அத்தியவசிய பொருட்களான பால்மா, எரிவாயு போன்றவற்றிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் எரிபொருள் களஞ்சியசாலைகளில் பாரியளவில் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எரிபொருளை இறக்குமதி செய்வதில் நிலவும் பாரிய பிரச்சினை தொடர்பாக தீர்வு வழங்கப்படாவிட்டால் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நாடு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே தனவந்தவர்களுக்கு வரி சலுகை வழங்கியமையினால் 600 பில்லியன் ரூபா வரையான நிதியை இழக்க ​நேர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், வயது வந்த ஒரு இலங்கையருக்கு அவரது சம்பளத்தில் 60 சதவீதத்தை உணவுக்கு செலவிட நேர்ந்துள்ளதாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் உலக வாழ்க்கை செலவு புள்ளிவிபரத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார். உணவு செலவை ஈடு செய்ய முடியாத வறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, கொரோனா தொற்று பரவல் உச்சத்தை அடையும் நிலையில் இலங்கை காணப்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முழு நாட்டையும் மக்களையும் பேரழிவின் விளிம்பிற்கு தள்ளுவதையே அரசாங்கம் வெற்றிகரமாகவும் முறையாகவும் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலை, நிமிடத்துக்கு நிமிடம் பாரதூரமான நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பாரிய அபிஷேகத்தின் பின்னர் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சரின் கீழ் இதுவரையில் இடம்பெற்ற வழமையான செயற்பாடுகளே இடம்பெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். சேதம் வழமையை விட அதிகமாக காணப்படுவதே தற்போது இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்