கொரோனா நோயாளர்களுக்கான கட்டில்கள் போதியளவில் இருக்கின்றனவா?

by Staff Writer 09-08-2021 | 7:11 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த கட்டில்களில் 1,200 கட்டில்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர்களுக்காக நேற்று (08) வரை 33,962 கட்டில்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் 32,762 கட்டில்களில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார். இதனிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையை கையாள்வதற்கு மாற்றீடாக சாதாரண நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்கள், கொரோனா நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படலாம் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நோய் அறிகுறி தென்படாத மற்றும் சிறு அளவில் அறிகுறிகளுடனான கொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு அண்மையில் அறிக்கை வௌியிட்டிருந்தது. அவையாவன: 01) நோய் அறிகுறிகள் புலப்படாத கொரோனா தொற்றாளர்களை வீடுகளிலேயே வைத்து கண்காணிப்பது மற்றும் வைத்தியதொடர்பான தீர்மானத்தை பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியினாலே எடுக்க முடியும் 02) இவ்வாறு வீடுகளில் கண்காணிக்கப்படும் கொவிட் நோயாளர்கள் 02 தொடக்கம் 65 வயதுக்கிடைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் * இணைந்த குளியலறையுடன் போதுமான காற்றோட்ட வசதியுடனான தனி அறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் * உடல் பருமனான, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உடையவர்களாக இருத்தல் ஆகாது * நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களாக இருத்தல் ஆகாது * வீட்டில் போதுமான சுய பாதுகாப்பு அல்லது பராமரிப்பாளர் ஆதரவு இருக்க வேண்டும் * முறையான தொடர்பாடல் வசதிகள் மற்றும் தொடர்புகொள்ளும் திறன் இருக்க வேண்டும்