வவுனியா இரட்டை கொலை சம்பவம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் 

வவுனியா இரட்டை கொலை சம்பவம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் 

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2021 | 10:41 am

Colombo (News 1st) வவுனியாவில் 06 வருடங்களுக்கு முன்னர் 20 வயது பெண் மற்றும் அவரது 06 மாத சிசு ஆகியோரை கொலை செய்து எரியூட்டிய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாயும் பிள்ளையும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி காணாமற்போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் தாயார் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முன்வைத்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் போது, நேற்று முன்தினம் (07) சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் குறித்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு அழைத்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா – முருகனூர் பகுதியில் குறித்த பெண்ணையும் அவரது குழந்தையையும் சந்தேகநபர் கொலை செய்து எரியூட்டியுள்ளமை கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, குறித்த பகுதியில் வவுனியா பதில் நீதவான் ஜே. அருணன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது எலும்புக்கூடொன்று நேற்று (08) மீட்கப்பட்டது.

சந்தேகநபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வவுனியா பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்