COVID தொற்றால் மேலும் 98 பேர் உயிரிழப்பு

COVID தொற்றால் மேலும் 98 பேர் உயிரிழப்பு

by Staff Writer 07-08-2021 | 10:48 AM
Colombo (News 1st) இலங்கையில் மேலும் 98 பேர் COVID தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 54 ஆண்களும் 44 பெண்களும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களில் 30 வயதிற்கு குறைவான ஒருவரும் 30 வயது தொடக்கம் 60 வயதிற்கு இடைப்பட்ட 27 பேரும் அடங்குவதோடு, ஏனைய 70 பேரும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள COVID மரணங்களின் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 2792 பேருக்கு நேற்று COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,24,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 30,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின் , போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லாத இடங்களுக்கு மாற்று திட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, முப்படையினர் மற்றும் தனியார் துறையினரை சேர்ந்தவர்களை சிகிச்சைகளுக்காக உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு நாட்டிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, நோயாளர்களை ஏற்றிச்செல்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மாற்று திட்டங்களை மேற்கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.