728,000 AstraZeneca தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

728,000 AstraZeneca தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது

by Staff Writer 07-08-2021 | 5:33 PM
Colombo (News 1st) ஜப்பானின் அன்பளிப்பான 728,000 AstraZeneca தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று நாட்டை வந்தடைந்தது. இதனிடையே, வேகமாக பரவும் COVID-19 டெல்டா பிறழ்வில் இருந்து உயிரை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா டெல்டா பிறழ்வு உலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் வேகமாக பரவி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரையும் நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாவோரில் 1.5 வீதமானவர்கள் மரணமடைவதுடன், பெரும்பாலானோர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அபாய நிலையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அநாவசியமாக வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும், இரண்டு மீட்டரில் சமூக இடைவௌியை பேணுவதுடன், பொதுமக்கள் அதிகம் கூடும் மங்கல, அமங்கல நிகழ்வுகளில் பங்கேற்பதை முற்றாக தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறும் நீண்டநாட்கள் தொடரும் நோய் நிலைமைகள் இருந்தால், ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறும் அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.