COVID இரண்டாம் தடுப்பூசி வழங்கப்படும் இடங்களில் முதலாம் தடுப்பூசியையும் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 06-08-2021 | 8:16 PM
Colombo (News 1st) இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும் எந்தவொரு நிலையத்திலும் 30 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று கூடிய COVID செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. COVID செயலணி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதத்திற்குள் நாடளாவிய ரீதியில் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் குறைந்தபட்சம் 1500 பேரை விட அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக இன்றைய கலந்துரையாடலின் போது புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மக்கள் ஒன்றுகூடியமை நாடளாவிய ரீதியில் COVID தொற்று துரிதமாக பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நோய் அறிகுறிகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்கான திட்டங்களை ஏற்படுத்துவதற்காக, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய ஆலோசனைகளை ஊடகங்களூடாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனிடையே, செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.