தேசவழமை சட்ட பிரிவுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்

தேசவழமை சட்டத்தின் பிரிவுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்: நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன்

by Bella Dalima 05-08-2021 | 7:40 PM
Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ள பாலேந்திரன் சசி மகேந்திரன் இன்று தனது சம்பிரதாயபூர்வ உரையை நிகழ்த்தினார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று முற்பகல் அவர் தனது உரையை நிகழ்த்தினார். பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களை திருத்துவதற்கான தேவை காணப்படுவதாக நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தனது உரையில் கூறினார். தற்கால சமூகத்தின் தேவைகளையும் அவசியத்தையும் நிவர்த்தி செய்யும் வகையில், தேசவழமை சட்டத்தின் பிரிவுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் 1989 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதவியேற்றதுடன், 1991 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சொலிசிட்டராக பதவிப்பிரமாணம் பெற்றார். இவர் யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கிற்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழாமிற்கு தலைமை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர தலைவராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் 8 மாதங்களில் 150-க்கும் மேற்பட்ட வழக்குகளை நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் நிறைவு செய்துள்ளார்.