கர்ப்பிணிகள் வீட்டிலிருந்தே தொழில் புரிய அனுமதி

கர்ப்பிணி தாய்மார்கள் வீட்டிலிருந்தே தொழில் புரிய நிர்வாக அமைச்சு அனுமதி

by Bella Dalima 05-08-2021 | 6:49 PM
Colombo (News 1st) அரச சேவையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் வீட்டிலிருந்தே தொழில் புரிவதற்கான சுற்றுநிரூபத்தை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது நிர்வாக அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். டெல்டா பிறழ்வு வேகமாக பரவுகின்றமை தொடர்பில் நிதிஅமைச்சில் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இதன்போது, கர்ப்பிணி தாய்மார்கள் வீட்டிலிருந்தே தொழில் புரிவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மங்கள நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள், ஒன்றாக உணவு உண்டவர்கள் மத்தியிலேயே அதிகளவில் கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார். ஒக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்தார்.