கொரோனா நோயாளர்களால் நிரம்பும் வைத்தியசாலைகள்; பாரதூரமான நிலை என சுகாதார பிரிவு எச்சரிக்கை

கொரோனா நோயாளர்களால் நிரம்பும் வைத்தியசாலைகள்; பாரதூரமான நிலை என சுகாதார பிரிவு எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

05 Aug, 2021 | 1:06 pm

Colombo (News 1st) டெல்டா பிறழ்வு பரவல் தொடர்பில் மக்கள் மிகுந்த புரிதலுடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

பெரும்பாலான வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள், நோயாளர் விடுதிகள், இடவசதியுள்ள அனைத்து இடங்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதால், இதனை பாரதூரமான நிலைமையாகக் கருத வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

காலி – கராப்பிட்டிய கொரோனா சிகிச்சை நிலையத்தில் 120 கட்டில்கள் காணப்படுவதுடன், 220 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களுக்கு மேலதிகமாக அங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 70 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 100 கொரோனா நோயாளர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்காக 54 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 156 கொரோனா நோயாளர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஏனைய விடுதிகளின் பகுதிகளும் பயன்படுத்தப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் தெல்தெனிய வைத்தியசாலையிலும் நோயாளர்களின் எண்ணிக்கை கொள்ளளவை அண்மித்துள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள 160 கட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தெல்தெனிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் 5 கட்டில்கள் காணப்படுவதுடன், அவை அனைத்தும் சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

களுபோவில வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 160 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும், சுமார் 250 கொரோனோ நோயாளர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளார் ஒருவர் தெரிவித்தார்.

IDH வைத்தியசாலையும் நிரம்பியுள்ளது. அங்கு சுமார் 200 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அவை அனைத்திலும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்