by Staff Writer 04-08-2021 | 7:24 PM
Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் R.ராஜமகேந்திரன் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய சேவையினை இந்து வித்தியா விருத்தி சங்கத்தினர் நினைவுகூர்ந்துள்ளனர்.
துணிச்சலும் உறுதியும் கொண்டு இந்து வித்தியா விருத்தி சங்கத்தின் எழுச்சிக்காக இறுதி மூச்சுவரை அர்ப்பணிப்புடன் உழைத்த அமரர் R.ராஜமகேந்திரன் அவர்களின் இழப்பு உண்மையில் ஈடு செய்ய முடியாதது என இந்து வித்தியா விருத்தி சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
தன் முன்னோர்கள் போல இந்து வித்தியா விருத்தி சங்கத்தினூடாக இந்து சமயத்திற்கும் இந்து சமயத்தவர்களுக்கும் அவர் ஆற்றிய சேவை அளப்பரியது என தெரிவித்துள்ள வித்தியா விருத்தி சங்கம், தன் முகங்காட்டாது தனக்கென ஒரு தனித்துவத்தினைப் பேணி, இறுதி வரை அவர் பணியாற்றியதாகவும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்துக்களுக்கு மட்டுமல்லாது அவர் அரவணைத்து நின்ற அனைத்து சமூகத்தினருக்கும் அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும் என்பதுடன், அவர் இன மத மொழி பேதங்களின்றி அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டியவர் என்றும் இந்து வித்தியா விருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் அந்தஸ்தை பெறுவதற்கு பக்கபலமாக நின்று செயற்பட்ட அமரர் R. ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாதது என புடவை வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஊடகத்துறையை டிஜிட்டல்மயமாக்க அதீத பங்காற்றிய அமரர் ராஜமகேந்திரன் அவர்கள் பின்தங்கிய கிராம மக்களின அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பல சமூக சேவைகளை முன்னெடுத்துள்ளதாக புடவை வர்த்தகர் சங்கத்தின் இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.