வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவு

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவு

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 1:07 pm

Colombo (News 1st) முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல போவதில்லை என சட்டமா அதிபர், கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

கொழும்பில் வசித்த 11 இளைஞர்களை கடத்தி காணாமலாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதி தமது திணைக்களம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார மன்றுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அன்றைய தினத்தில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார தெரிவித்துள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கும் உத்தரவை, எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி, வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும் சந்தர்ப்பத்திலேயே மன்றுக்கு அறிவிக்குமாறு அரச சிரேஷ்ட சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்