தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் அறிவிப்பு

தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 8:18 pm

Colombo (News 1st) சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்காமையால், தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனப் பேரணியாக சென்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் இன்று கூடியதுடன், அவர்களில் 42 பேர் இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வெலிசறை, கடவத்தை, மொரட்டுவை, பன்னிப்பிட்டிய ஆகிய இடங்களிலிருந்து ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் வாகனப் பேரணியாக ஜனாதிபதி அலுவலகம் நோக்கி சென்றிருந்தனர்.

வாகனப் பேரணியை நிறுத்துமாறு இரண்டு இடங்களில் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

COVID நிலைமைக்கு மத்தியில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொலிஸார் இவ்வாறு அறிவித்தனர்.

பொலிஸாரின் அறிவுறுத்தலை கருத்திற்கொள்ளாமல், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடினர்.

எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

சம்பளப் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பமளிக்குமாறு இதன்போது தொழிற்சங்கத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர், வௌியே வந்திருந்தார்.

எனினும், அவருடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 பெண்கள் உள்ளிட்ட 42 பேர் சில இடங்களில் இன்று மாலை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வருகை தந்த 10 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளித்து கல்வி தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரரின் தலைமையில் இன்று கண்டியில் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு எதிரான தேசிய ஒன்றியம் எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியின் போது, 10 இலட்சம் கையொப்பங்களை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் ஆரம்பமான பேரணியின் இன்றைய பயணம் கடுகன்னாவையில் நிறைவடைந்தது.

மாவனெல்லயிலிருந்து நாளைய பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி இவர்கள் கொழும்பை வந்தடையவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்