சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை: ஜனாதிபதி அறிவிப்பு

சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை: ஜனாதிபதி அறிவிப்பு

சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை: ஜனாதிபதி அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 5:41 pm

Colombo (News 1st) சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் விவசாயத்திற்காக இரசாயன பசளை இறக்குமதி செய்வதற்கு எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விசேட வர்த்தக பயிர்ச்செய்கைக்கான இரசாயன பசளையை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளுக்கு அமைய, விசேட இரசாயன உரங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு, விவசாய திணைக்களத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் விசேட அனுமதிப்பத்திர முறைக்கு அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், விவசாய செய்கைகளுக்கு சர்வதேச சேதனப் பசளை தரங்களுக்கு அமைய அனுமதி வழங்கப்பட்ட சேதனப் பசளையை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

விவசாய திணைக்களம், பூங்காக்கள் திணைக்களம், மற்றும் துறைசார் அரச நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் 06 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் விசேட இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பச்சைவீட்டு திட்டத்தினூடாக விவசாய செய்கையை மேற்கொள்ள பதிவு செய்துள்ளவர்கள், அலங்கார மலர் உற்பத்தி உள்ளிட்ட விசேட தேவைகளுக்கு மாத்திரமே இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய மூன்று மூலக்கூறுகளும் அடங்கிய வில்லைகள் அல்லது இந்த மூலக்கூறுகள் அடங்கிய 10 கிலோவிற்கும் குறைந்த எடையுடைய பொதிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்