சுவர்ணமஹால் ஜூவலர்ஸ் வழக்கு: நால்வருக்கு பிணை

சுவர்ணமஹால் ஜூவலர்ஸின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வருக்கு பிணை

by Staff Writer 03-08-2021 | 12:41 PM
Colombo (News 1st) சுவர்ணமஹால் ஜூவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் 04 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜீவக எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகிய நான்கு பிரதிவாதிகளும் அறிவித்தலுக்கு அமைய இன்று மன்றில் ஆஜராகினர். நான்கு பிரதிவாதிகளும் தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 8 சரீர பிணைகளிலும் செல்வதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளத்தை பெற்று, அவர்கள் தொடர்பில் இதற்கு முன்னர் பதிவாகியுள்ள குற்றச்செயல்கள் தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சுவர்ணமஹால் விற்பனை நிலையம் என்ற போர்வையில் இந்த நிறுவனத்தின் கிளைகளை நாடளாவிய ரீதியில் ஸ்தாபித்து, வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி வழங்குவதாக அறிவிப்புகளை விடுத்ததனூடாக, 07 பில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.