ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை

by Staff Writer 03-08-2021 | 8:05 PM
Colombo (News 1st) COVID வைரஸின் டெல்டா பிறழ்வு அதிகளவில் பரவி வருவதனால், ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையினால் அவ்வாறான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் அதிகபட்ச கொள்ளளவை ஏற்கனவே அடைந்துள்ளமையினால், ஒக்சிஜன் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்தால், இன்னும் சில நாட்களில் சிகிச்சையளிக்கும் அதிகபட்ச கொள்ளளவு எல்லை மீறி சென்றுவிடும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்சிஜன் தட்டுப்பாடு மாத்திரம் அன்றி நோயாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், COVID மரணங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கலாம் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாட்டில் நடைமுறையில் இருந்த பயணக்கட்டுப்பாடு போன்ற விடயங்களில் தளர்வு ஏற்படுத்துவது 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்' செயற்பாட்டிற்கு ஒப்பானது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்கள் அதிகரித்தால் எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியாது எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமை தொடர்பில் மீண்டும் மீளாய்வு செய்து, நாட்டின் சுகாதாரம் மற்றும் பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரஜைகளின் வருமான வழிகளை பாதுகாப்பது முக்கியம் என்பதனை ஏற்றுக்கொள்கின்ற போதிலும் அவர்களை வாழ வைப்பது அதனைவிட முக்கியமானது என சுட்டிக்காட்டும் இந்த சங்கம், மரணித்தவர்களை விடவும் நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பது முக்கியமானது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளது.