ஹிஷாலினி மரணம்: நீதி கோரி தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

by Staff Writer 02-08-2021 | 7:37 PM
Colombo (News 1st) ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் (02) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கண்டி - அலகொல்ல, ஹட்டன் மேபீல்ட், புஸ்ஸல்லாவ சோகம, அக்கரப்பத்தனை - ஆக்ரோயா, நுவரெலியா, மட்டுகலை ஆகிய பகுதிகளில் சிறுமி இஷாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சோகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே, சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்புக்கு நீதி கோரி மாத்தளை பிட்டகந்த தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மாத்தளை தம்பலகல, பிட்டகந்த, சின்னசெல்வகந்த மற்றும் பெரிய செல்வகந்த தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், மேப்பீல்ட் மற்றும் சார்மஸ் தோட்டங்களை சேர்ந்த சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் இணைந்து இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இதனிடையே, மலையக சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றமை மற்றும் ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்றது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பாரத் அருள்சாமி, மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.