அரச ஊழியர்களை நாளை (02) முதல் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல்

அரச ஊழியர்களை நாளை (02) முதல் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2021 | 5:08 pm

Colombo (News 1st) நாளை (02) முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்க வேண்டுமென அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளில் பெரும்பாலானோர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதால், அரச சேவைகளை தடையின்றி வழமை போன்று முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைவாக, இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய சுற்றுநிரூபத்திற்கு அமைவாக, இதற்கு முன்னர் வௌியிடப்பட்டிருந்த சுழற்சி முறையில் சேவைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளில் இருந்தவாறு சேவைகளை மேற்கொள்ளுதல் தொடர்பிலான அனைத்து சுற்றுநிரூபங்களையும் இரத்து செய்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அரச சேவையில் பணிபுரியும் கர்ப்பிணித் தாய்மார்களும் நாளை (02) முதல் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சேவைக்கு சமூகமளிக்க முடியாத நிலையில் விசேட தேவையுடன் கூடிய அரச ஊழியர்கள் இருப்பார்களாயின், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவருக்கு அறிவிக்குமாறும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகையோர் அரச சேவையில் தமக்குரிய விடுமுறைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பயன்படுத்திக் கொள்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்