Martine Moise முதற்தடவையாக ஊடகங்களுக்கு தகவல் 

ஹெய்ட்டி ஜனாதிபதி கொலை: முதற்தடவையாக தகவல்களை வௌிப்படுத்தினார் முதற்பெண்மணி

by Bella Dalima 31-07-2021 | 4:02 PM
Colombo (News 1st) படுகொலை செய்யப்பட்ட ஹெய்ட்டி ஜனாதிபதியின் மனைவி Martine Moise அமெரிக்காவில் சிகச்சை பெற்று வருவதுடன், தனது கணவரின் படுகொலை தொடர்பில் முதற்தடவையாக விடயங்களை வௌிப்படுத்தியுள்ளார். தான் உயிரிழந்துவிட்டதாக துப்பாக்கிதாரிகள் எண்ணியதாக The New York Times பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஹெய்ட்டி ஜனாதிபதி Jovenel Moise உயிரிழந்ததுடன், முதற்பெண்மணி Martine Moise படுகாயமடைந்தார். அவர் மேலதிக அவசர சிகிச்சைகளுக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிதாரிகள் தமது வீட்டை கொள்ளையடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்கிய 30 முதல் 50 பாதுகாவலர்களில் ஒருவரேனும் கொல்லப்படாமலோ, எவ்வித காயங்களுக்கும் உள்ளாகாமலோ எவ்வாறு தப்பித்தனர் என்பது தொடர்பில் தாம் ஆச்சரியமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னலக்குழுக்களும் கட்டமைப்புமே தனது கணவரை கொன்றிருக்கக்கூடும் என அவர் சந்தேகம் வௌியிட்டுள்ளார். ஹெய்ட்டி ஜனாதிபதியின் படுகொலை தொடர்பில், Jovenel Moise-இன் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் கொலம்பிய கூலிப்படையினர் 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வௌிநாடுகளின் உதவியுடன் ஜனாதிபதி கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.