ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு

by Staff Writer 31-07-2021 | 8:20 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தலைவரும் விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவத்துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோரால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இன்று காலை 8.30-க்கு ஆரம்பமான பிரேத பரிசோதனை மாலை 5.15 வரை சுமார் 09 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். முதலில் சடலம் CT SCAN ஊடாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் பின்னர் உடற்பாகங்கள் சிலவற்றின் மாதிரிகள் பெறப்பட்டதுடன், அவற்றை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதற்கமைய, இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்ட பின்னர் முழுமையான அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார். முழுமையான அறிக்கை கிடைக்கும் வரை, சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.