முதல் 3 இடங்களையும் கைப்பற்றிய ஜமைக்க வீராங்கனைகள்

ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றிய ஜமைக்க வீராங்கனைகள்

by Bella Dalima 31-07-2021 | 9:00 PM
Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் ஜமைக்க வீராங்கனைகள் கைப்பற்றினர். அதற்கமைய, மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களும் ஜமைக்க வீராங்கனைகள் வசமானது. டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை நடைபெற்றது. போட்டியை 10.61 செக்கன்ட்களில் கடந்த Elaine Thompson ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இந்த போட்டியில் உலக சாம்பியனான Shelly-Ann Fraser-Pryce வெள்ளிப்பதக்கத்தையும் Shericka Jackson வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்ட போட்டியில் போலந்து குழாம் தங்க பதக்கத்தை சுவீகரித்தது. போட்டியை அவர்கள் 3 நிமிடங்கள், 9.87 செக்கன்ட்களில் பூர்த்திசெய்தார்கள். வெள்ளிப்பதக்கம் டொமினிக் குடியரசுக்கும் வெண்கல பதக்கம் அமெரிக்காவிற்கும் கிடைத்தன. ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் சுற்று இன்று நடைபெற்றதுடன், இதில் இலங்கையின் யுபுன் அபேகோன் மூன்றாவது குழுவில் போட்டியிட்டார். போட்டியை 10.32 செக்கன்ட்களில் நிறைவுசெய்த அவர் அந்தக் குழுவில் ஆறாமிடத்தை அடைந்து வெளியேறினார். எவ்வாறாயினும், 25 வருடங்களின் பின்னர் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்குபற்றிய இலங்கையராக யுபுன் அபேகோன் பதிவானார்.