08 வழக்குகளிலிருந்து சரண குனவர்தன விடுதலை

08 வழக்குகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குனவர்தன விடுதலை

by Staff Writer 30-07-2021 | 2:53 PM
Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட 08 வழக்குகளின் குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குனவர்தனவை விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார். சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது, ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களினதும் எழுத்து மூல அனுமதியை பெறாது தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜராகிய உதவி பணிப்பாளர் அசித அன்டனி குறிப்பிட்டார். இதனால், தமது சேவை பெறுநரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யுமாறு சரண குனவர்தன சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு அமைய, குற்றவியல் கட்டளைச்சட்டத்தின் 188 ஆவது சரத்திற்கு அமைய சந்தேகநபரை விடுதலை செய்வதாக பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல அறிவித்தார். 2007 ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில், உரிய விலைமனு கோரலின்றி, குத்தகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்ததனூடாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சரண குனவர்தனவிற்கு எதிராக 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.