ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

by Staff Writer 30-07-2021 | 2:45 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சடலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். டயகம தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டும் பணிகள் காலை 8.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டன. விசேட சட்ட மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. டயகம தோட்ட பொது மயானத்திற்கு, சிறுமி ஹிஷாலினியின் தாயும் தந்தையும் சகோதரரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய, சிறுமியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.