மிலோதா நிறுவனம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பீடமாக பிரகடனம்

by Staff Writer 30-07-2021 | 9:08 PM
Colombo (News 1st) கொழும்பு கோட்டை ஶ்ரீமத் பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் உள்ள மிலோதா நிறுவனம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பீடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சுகளின் விடயதானங்களை மீண்டும் சீர்திருத்தம் செய்து, ஜனாதிபதியினால் நேற்று வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மிலோதா ( Miloda) எனப்படும் Academy of Financial Studies இதற்கு முன்னரும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தனிப்பட்ட நிறுவனமாக செயற்பட்டதோடு புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தற்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பீடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரத்தினபுரி நகரில் எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர். கொத்தலாவல சட்டமூலத்தை நீக்குமாறு வலியுறுத்தி மேலும் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் பன்வில மற்றும் ஹக்மன பிரதேசங்களில் இடம்பெற்றன. இதனிடையே, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் , இலவச கல்விக்கான மாணவர் அமைப்பு , ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்கள், கொத்தலாவல சட்டமூலம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கையேடுகளை இன்று புறக்கோட்டையில் பகிர்ந்தளித்தனர்.