டெங்கு வைரஸ் பிறழ்வுகள் அதிகரிப்பு

டெங்கு வைரஸ் பிறழ்வுகள் அதிகரிப்பு; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 30-07-2021 | 2:37 PM
Colombo (News 1st) டெங்கு வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன. தேசிய டெங்கு ஒழிப்பு பணியகம், மருத்துவ ஆய்வு நிறுவகம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு வைரஸ் பிறழ்வு தொடர்பான ஆய்வு பிரிவு ஆகியன ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வுகளினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களின் பின்னர் டெங்கு வைரஸின் முதலாவது பிறழ்வு மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக ஆய்வுகளூடாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டின் அநேகமான பகுதிகளில் மீண்டும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,497 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 70 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மாத்திரம் 3,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டார்.