இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க மறுப்பு

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: இந்திய மத்திய அரசு தெரிவிப்பு

by Bella Dalima 30-07-2021 | 5:13 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக குடியேறியதால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி - கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து தீர்மானிக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மேன்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது எனவும் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தமக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2019 ஆம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்குமாறும் அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போதே, இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது எனவும் மத்திய அரசு தம் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.