அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்குமாறு ஆலோசனை

ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை

by Staff Writer 30-07-2021 | 3:33 PM
Colombo (News 1st) சுகாதார வழிகாட்டல்களுக்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை கடமைக்கு அழைத்தல் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் வகையில் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில், கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் செயற்திட்டத்தினூடாக, குறிப்பிட்டளவான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பெருமளவான அரச ஊழியர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அரச சேவையினை வழமை போன்று முன்னெடுத்து செல்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.