முள்ளிவாய்க்காலில் காணி சுவீகரிப்பு முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

by Staff Writer 29-07-2021 | 8:14 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக இன்று அமைதியின்மை ஏற்பட்டது. தமது காணியை சட்டபூர்வமாக சுவீகரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் கூறினர். முள்ளிவாய்க்கால் பகுதியில் தமக்கு சொந்தமான 612 ஏக்கர் காணியில் கடற்படை முகாம் அமைந்துள்ளதாக காணிக்கு உரிமை கோரும் சிலர் தெரிவித்தனர். காணியை அடையாளப்படுத்துவதற்காக காலை 9 மணிக்கு வருகை தருமாறு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், காலை 7.45 அளவில் கடற்படை முகாமிற்குள் நுழைவதற்கு நில அளவை திணைக்களத்தினர் முயற்சித்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது. கடற்படை முகாமிற்குள் இருந்து அதிகாரிகளை வௌியேறுமாறு இதன்போது மக்கள் கோஷமிட்டனர். இதனையடுத்து, அங்கு கூடியிருந்த அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களுடன் பொலிஸார் கலந்துரையாடினர். மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் நடத்தி தீர்வு காணும் வரை நில அளவை நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை விடப்பட்டது. எனினும், நில அளவீட்டு நடவடிக்கையில் அதிகாரிகள் இரகசியமாக ஈடுபடுவதாக தெரிவித்து, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், சுமார் 3 மணித்தியாலங்கள் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. முகாமிற்குள் இருந்து வௌியேறிய, நில அளவை திணைக்கள வாகனத்தை மறிப்பதற்கு மக்கள் முயன்ற நிலையில், மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, நில அளவை திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளரும் மேலதிக அரசாங்க அதிபரும் மக்களுடன் கலந்துரையாடினர். மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வளாகத்தில் சீன பிரஜைகள் சிலரையும் காண முடிந்தது. இதன்போது, சீன பிரஜைகளுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.