ஹிஷாலியின் மரணம் தொடர்பில் மேலும் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு

ஹிஷாலியின் மரணம் தொடர்பில் மேலும் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு

ஹிஷாலியின் மரணம் தொடர்பில் மேலும் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2021 | 12:18 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 5 பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்படிருந்த 11 பேரில், ஐவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், எரிகாயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஹிஷாலியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை நடத்த அனுமதி வழங்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய கடந்த 26ஆம் திகதி அனுமதி வழங்கினார்.

அதனையடுத்து, ஹிஷாலினியின் உடல் நாளைய தினம் (30) தோண்டி எடுக்கப்படவுள்ளது.

சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தலைவரும் விரிவுரையாளருமான வைத்தியர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவத்துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமி ஹிஷாலினியை தொழிலுக்காக டயகம பகுதியிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்