அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவிற்கு பலரும் அனுதாபம்

அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவிற்கு பலரும் அனுதாபம்

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2021 | 7:23 pm

Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஜா நிறுவனத் தலைவரின் மறைவு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவரும் நாட்டின் தலைசிறந்த வர்த்தகருமான அமரர். திரு. ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு நாட்டின் வர்த்தகர்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள, அகில இலங்கை நகை வர்த்தக சங்கத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னிகரில்லா மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, மிக சிறப்பாக அந்நிறுவனங்களை வழிநடத்தி, நாட்டின் வெற்றிபெற்ற வர்த்தகராக திரு. ராஜமகேந்திரன் விளங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிகரத்தின் மறைவு செய்தி கேட்டு சிந்தை கலங்கி நிற்பதாக கொழும் -11 ஐ சேர்ந்த கென்ட் விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.

கலங்கரை விளக்கமாய் திகழ்ந்து , விளையாட்டு வீரர்கள் பலருக்கு விளக்கமாக வழிக்காட்டியவர் இன்று இல்லை என்று கவலையடைவதாகவும் கென்ட் விளையாட்டு கழத்தின் தலைவர் ஏ.பிரபா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, திரு. ராஜமகேந்திரனின் இழப்பானது தமிழ் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பு என இலங்கை இரும்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அன்னாரின் மறைவிற்கு இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்களால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும் கொழும்பில் நினைவேந்தல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்