ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்த தயார் - இலங்கை வர்த்தக சங்கம்

by Staff Writer 28-07-2021 | 9:06 AM
Colombo (News 1st) தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்த தயாராகவுள்ளதாக இலங்கை வர்த்தக சங்கம், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தக சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்று (27) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே, இலங்கை வர்த்தக சங்கம் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றினைச் செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இலங்கை வர்த்தக சபை அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். மீள்பிறப்பாக்க வலுச்சக்தி, விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை, வர்த்தக சபையின் தேசிய கொள்கைகள் குழுக்கள் விசேட கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.